தமிழ் ஊடகவியலாளர் மீது கொலைவெறி தாக்குதல்!!!

இலங்கையின் பிரபல ஊடகவியலாளரும், வெள்ளை வேன் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்கு விசாரணைகளில் விசேட செய்தி அறிக்கையிடலை செய்துவந்த ஐ.பி.சி தமிழ் செய்திச் சேவையின் பிரதி ஆசிரியரான ஸ்ரீயான் சுஜித் மீது இனந்தெரியாத கும்பலொன்று கடும் தாக்குதலை நடத்தியிருக்கின்றது.

இந்த சம்பவம் இன்று 2019.02.09ஆம் திகதி  முற்பகல் கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை நகருக்கு அருகே இடம்பெற்றிருக்கின்றது.

சம்பவத்தையடுத்து படுகாயமடைந்த ஊடகவியலாளர் ஸ்ரீயான் சுஜித், உடனடியாக கரவநெல்ல பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு 03 நாட்கள் தொடர் சிகிச்சைப் பெற்றுவந்தார்.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

2019.02.09 அன்று முற்பகல் வேளையில் ஊடகவியலாளர் ஸ்ரீயான் சுஜித் தனது வாகனத்தில் எட்டியாந்தோட்டை நகருக்குப் பிரவேசிக்கின்ற பிரதான வீதிக்கு அருகே உள்ள நகர சபை மைதானத்திற்கு அண்மையில் வாகனத்தை நிறுத்திய அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், வாகனத்தையும் தாக்கியதோடு, ஊடகவியலாளர் மீதும் கடும் தாக்குதலை நடத்தி அங்கிருந்து இலக்கத்தகடு அற்ற வாகனத்தில் வேகமாக சென்றுவிட்டனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் உடனடியாக செயற்பட்டு படுகாயத்திற்கு உள்ளாகிக்கிடந்த ஊடகவியலாளர் ஸ்ரீயான் சுஜித்தை, வாகனமொன்றில் ஏற்றி கரவநெல்ல பொது வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுத்தார்கள்.

இந்த தாக்குதலினால் அவரது கண் அருகேயும், நெஞ்சுப் பக்கமாகவும் சிறிய காயங்கள் ஏற்பட்ட போதிலும், இடதுபாதம் பாரிய பாதிப்பை எதிர்கொண்டிருந்ததா மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுபோன்ற தொடர் ஊடக அடக்குமுறையும், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல், கடத்தல் மற்றும் அச்சுறுத்தல்களும் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றன.

தலைநகரான கொழும்பு – தெஹிவளை மற்றும் கொட்டாஞ்சேனையில் ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் வெள்ளை வேனில் கடத்தி காணாமல் போகச்செய்யப்பட்ட சம்பவங்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அப்போதிருந்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் அரங்கேறியது. இதுகுறித்த வழக்கு விசாரணையும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடக்கின்றது. அதேபோல ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், படுகொலைகள், அச்சுறுத்தல்களும் இடம்பெற்று வந்தன. இதன் தொடர்ச்சியாகவே தற்போது தமிழ் ஊடகவியலாளரான ஸ்ரீயான் சுஜித் மீதான தாக்குதலும் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றது என்று இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர்களில் ஒருவரான சிரேஸ்ட ஊடகவியலாளர் அமிர்தநாயகம் நிக்ஸன் தெரிவித்தார்.

மேற்படி தாக்குதல் சம்பவம் பற்றி எட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் ஸ்ரீயான் சுஜித் சார்பில் முறைப்பாட்டளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த அளவுக்கு இந்த விசாரணைகள் இடம்பெறும் என்ற சந்தேகங்கள் கடந்தகால சம்பவங்கள் மூலம் பார்க்கையில் ஐயமாகவேதான் காணப்படுகின்றது.

You May also like