போர்க்களமான ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம்

ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், புதிய அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சியில் இன்றைய தினம் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பெரும் அமளி இடம்பெற்றிருக்கிறது.

புதிய கட்சி அமைக்கப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்திட வேண்டும் என்று கட்சியின் செயற்குழு உறுப்பினர்களிடையே பெரும் முரண்பாடுகள் இருந்தநிலையில் எதிர்வரும் 05ஆம் திகதி கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்திடுவது பிற்போடப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், பிரதானகட்சிகள் வேட்பாளர்களை தெரிவுசெய்வதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றது.

அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சியில் அதன் தற்போதைய தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாஸ ஆகியோரின் பெயர்கள் கட்சியின் உறுப்பினர்களிடையே காணப்படுகின்ற நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் அலரிமாளிகையில் இன்று பகல் நடைபெற்றது.

எதிர்வரும் 05ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான புதிய கூட்டணியின் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்கிற சந்தேகத்திற்கு இன்றைய தினம் தீர்வு கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று கூடிய மத்திய செயற்குழுக் கூட்டத்தில் புதிய கூட்டணி தொடர்பிலான யாப்பு மற்றும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இருந்த போதிலும் கூட்டணி ஒப்பந்தத்திற்கு முன்னதாக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்கிற முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று செயற்குழு உறுப்பினர்களான கபீர் ஹாஷிம், மங்கள சமரவீர உள்ளிட்ட பலரும் தெரிவித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சலசலப்புக்கு மத்தியில் கூட்டணி தொடர்பிலான யாப்பு மற்றும் யோசனைகளும் கோரப்பட்டுள்ளன. இந்த கூட்டணி யாப்பில் திருத்தங்கயை செய்வதற்கு மத்திய செயற்குழு அனுமதியளித்திருப்பதோடு, எதிர்வரும் 05ஆம் திகதிக்கு முன்னர் மீண்டும் செயற்குழுக்கூடி யாப்பில் ஏற்படுத்த வேண்டிய திருத்தங்கள் குறித்து இறுதித்தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் அக்கிலவிராஜ் காரியவசம், ஜனாதிபதி வேட்பாளர் குறித்த எந்த பேச்சும் இன்றைய கூட்டத்தில் இடம்பெறவில்லை என்று கூறினார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்கிற விடயம் இன்றைய மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பேசப்பட்டதாக மத்திய செயற்குழு உறுப்பினரான கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இருந்த போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முக்கிய தீர்மானம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று இன்றைய தினம் கட்சித் தலைமையகத்தில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின்போது அறிவிக்கப்பட்டது.

You May also like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *