ஈஸ்டர் தினத் தாக்குதல் குறித்து வாசுதேவ முக்கிய அறிவிப்பு

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தங்களது ஆதரவில் ஆட்சிபீடம் ஏறுகின்ற புதிய அரசாங்கத்தின் ஊடாக உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் தொடர்பிலான சுயாதீன விசாரணை நடத்தப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார உறுதியளித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து உரிய வகையில் விசாரணை செய்வதில்லை என்றும், உண்மைகளை கால்துடைப்பானுக்குக் கீழே மறைத்து வைப்பதாகவும் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை நேற்று முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இதனைக் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பிலான விசாரணை சர்வதேச அழுத்தங்களினால் மழுங்கடிக்கப்பட்டுவிட்டதாகவும், சர்வதேசத்தின் முன்பாக ஸ்ரீலங்கா நாட்டுத் தலைவர்கள் முதுகெலும்பற்றவர்களாக இருக்கின்றனர் என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை கடந்த 22ஆம் திகதி கொழும்பிலுள்ள பெல்லன்வில ரஜமகா விகாரையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது தெரிவித்திருந்தார்.

அதற்கு அடுத்த தினமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கர்தினாலின் இந்தக் கூற்றை கடுமையாக சாடியிருந்ததோடு, பிரச்சினைகள் இருந்தால் தன்னை சந்தித்து கலந்துரையாடி தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையிலேயே கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்றைய தினம் விசேட ஊடக சந்திப்பை நடத்தியிருந்த கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணை விவகாரத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கம் செயற்படும் விதம் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்த விசாரணைகள் முறையாகவும் சுயாதீனமாகவும் இடம்பெறுவதில்லை என்று குற்றஞ்சாட்டியிருந்த கர்தினால், விசாரணைக்காக அமைக்கப்பட்ட குழு ஊடாக உண்மைகள் மறைக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

தற்போதைய அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லை என்று வெளிப்படையாக தெரிவித்திருந்த கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற எந்தவொரு வேட்பாளரையும் தாம் சந்திக்கப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறியிருந்தார்.

கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை வெளியிட்டுள்ள இந்த பாரதூரமான விமர்சனம் குறித்து கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த மஹிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, புதிய அரசாங்கத்தின் ஊடாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை உரியவாறு நடத்தப்படும் என்று உறுதியளித்தார்.

You May also like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *