50 ரூபா வழங்கமுடியாது: நவீன் திஸாநாயக்க உடும்புப்பிடி

தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா சம்பள உயர்வு தொடர்பாக கடந்த அமைச்சரவையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், 50 ரூபா சம்பள உயர்வை வழங்க முடியாது என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறினார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 750 ரூபா வழங்கப்படுகின்றது. அத்துடன், 18 கிலோவுக்கு மேல் கொழுந்து பறிந்தால் மேலதிக கிலோவொன்றுக்கு 40 ரூபா வீதம் வழங்கப்படுகின்றது. இதன்படி மாதம் 30 ஆயிரத்துக்கும் மேல் உழைக்கின்றனர் என தகவல் கிடைத்துள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாகவே நிர்ணயிக்கப்படுகின்றது. எனவே, அந்த கூட்டு பொறுப்பை மீறமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

அதேபோல தோட்டத்தொழிலாளர்களுக்கு 50 ரூபா வழங்குவதாக இருந்தால் அதை மக்கள் பணத்திலிருந்தே வழங்கவேண்டும் என்று குறிப்பிட்ட அமைச்சர் நவீன் திஸாநாயக்க, எதிர்காலத்தில் ஏனைய துறையினரும் இவ்வாறு கொடுப்பனவு கோரலாம் என்றும் அந்த நிலைக்கு நாம் செல்லக்கூடாது எனவும் கூறினார்.

சம்பள அதிகரிப்பானது கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாகவே இடம்பெறவேண்டும் என்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்கும்வரை ஐக்கிய தேசியக் கட்சியுடனான 05ஆம் திகதி நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த கூட்டணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்போவதில்லை என்று அமைச்சர் பழனி திகாம்பரம் அறிவித்திருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

You May also like