மரண தண்டனை குறித்து மைத்திரியின் விசேட அறிவிப்பு

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம் செய்யும் தனது தீர்மானத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையானது சட்டவிரோதமானது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே இதனைக் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் இந்த பிரேரணை அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையானது அரசியலமைப்புக்கு முரணானது என சட்டமா அதிபர் தன்னிடம் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி கூறினார்.

சட்டமா அதிபரினால் தெரிவிக்கப்பட்ட செய்தியானது தனக்கு மிகவும் மகிழ்வைத் தந்ததாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழித்து இளைய தலைமுறையை காப்பாற்றும் தனது பயணம் தொடரும் என்றும் அறிவித்தார்.

You May also like