13க்கு அப்பாற்சென்று தீர்வு: மீண்டும் உறுதியளித்த மஹிந்த

13ஆவது திருத்தத்திற்கு அப்பாற்சென்று தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் தமிழ் கட்சிகளிடம் வாக்குறுதி வழங்கியுள்ளார்.

கொழும்பு விஜேராமயவில் உள்ள தனது இல்லத்தில் சில தமிழ்க் கட்சிகளை நேற்று இரவு மஹிந்த ராஜபக்ச சந்தித்து பலமணிநேரம் கலந்துரையாடல் செய்தார்.

இந்த சந்திப்பில் முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வாக்குறுதியையும் மக்களுக்கு வழங்க வேண்டாம் என்று ஆலோசனை கூறினார்.

ஏனென்றால் மைத்திரி – ரணில் அரசாங்கம் இதுவரை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆகவே மக்கள் அதிக ஆத்திரத்தில் இருப்பதால் தமது தலைமையில் உருவாகும் அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு வாக்குறுதியையும் அளிக்கப்போவதில்லை என்றும் மாறாக சொன்ன விடயங்களை செய்துகாட்டுவதாகவும் கூறினார்.

இந்த சந்திப்பின் பின்னர் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை கையாள்வதற்காக முன்னாள் அமைச்சரான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரணவை எதிர்கட்சித் தலைவர் மஹிந்த நியமித்தார்.

You May also like