ஐ.எஸ் தீவிரவாதம்:ரணில் வழங்கிய பரபரப்பு சாட்சியம்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து தனக்கோ தனது பாதுகாப்பு பிரிவினருக்கோ எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக இன்று மாலை முன்னிலையாகி சாட்சியமளித்த பிரதமர் இதனைக் கூறினார்.

சிரியாவில் இலங்கைப் பிரஜைகள் பயிற்சிப் பெறுவது குறித்த தகவல் கிடைத்தவுடன் அதுகுறித்து விசாரணை செய்யும்படி புலனாய்வுப் பிரிவுக்கு தாமே அறிவுறுத்தல் வழங்கியதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் வரை பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்த போதிலும் அதன் பின்னரான கூட்டங்களிற்கு தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று அவர் சாட்சியத்தில் கூறினார்.

இறுதியான நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு பொலிஸ்மா அதிபரைக்கூட அழைத்திருக்கவில்லை என்பதை அறிந்துகொண்டதாவும், பிரதமர் குறிப்பிட்டார்.

காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவங்களை வைத்து அது தீவிரவாதத்திற்கான முற்போக்கு செயற்பாடு என்பதை ஓர் அரசியல்வாதியாக அறிந்துகொண்டதாக தெரிவித்த பிரதமர் ரணில், துருக்கி நாட்டைச் சேர்ந்த அமைப்பு ஒன்று இங்கு செயற்படுவதாக தகவல் வந்ததாகவும், ஆனால் அந்த அமைப்பினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என்பதுவும் தனக்கு சொல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் தாக்குதலுக்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்கும். அதிலிருந்து அரசாங்கம் தழுவிச்செல்லாது. இப்போது அமுலில் உள்ள சட்டங்கள் குறைபாடுகள் என்பதால் புதிய சட்டங்களுக்கான தேவையை வலியுறுத்தினேன். அனுபவமுடைய அதிகாரிகளை சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு நியமிக்கும்படியும் வலியுறுத்தி வருகின்றேன். ஐ.எஸ் தீவிரவாதம் ஒரு புற்றுநோயைப் போன்றதாகும். நினைக்க முடியாதவர்கள் தீவிரவாத செயற்பாட்டில் ஈடுபடலாம். ஆயுதங்கள் அல்ல, கூர்மையான பொருட்கள் ஏன், வாகனங்களைக்கொண்டாகிலும் மோதி ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதால் கவனமாக இருத்தல் வேண்டும் என்று தனது சாட்சியத்தில் பிரதமர் தெரிவித்திருக்கின்றார்.

You May also like