இலங்கைக்கு அதிரடியாக விரையும் வெளிநாட்டு இராஜதந்திரிகள்

இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விசேட அறிக்கையொன்றை தயாரித்து ஐக்கிய நாடுகளிடம் சமர்பிப்பதற்காக ஐ.நா விசேட அறிக்கையாளர் ஒருவர் விரைவில் விஜயம் செய்யவுள்ளார்.

அடுத்த வாரமளவில் இலங்கைக்கு விஜயம் செய்கின்ற இந்தப் பிரதிநிதி, முக்கியமான சில இடங்களுக்கு சில பேராயர்களுடன் விஜயம் செய்யத் திட்டமிட்டிருப்பதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

விசேடமாக அண்மைக்காலத்தில் தாக்குதல்களுக்கு இலக்காகிய கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், கட்டுவாப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் ஆலயம் ஆகிய இடங்களுக்கும் அவர் விஜயம் செய்யவுள்ளார்.

அதேவேளை இனவாதிகளினால் தாக்குதல்களுக்கு இலக்காகிய சில தேவாலயங்களுக்கும் ஐ.நா விசேட பிரதிநிதி விஜயம் செய்யவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

குறித்த அறிக்கையாளர் கொழும்பில் எந்தவொரு ஊடக சந்திப்பையும் நடத்தாமலிக்கவும் தீர்மானித்திருப்பதாக நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

இதேவேளை தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் இந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கான விஜயத்தை முடித்த கையுடன் இலங்கைக்கு விரையவுள்ள இவர், முக்கிய அரசியல் தலைவர்களை அவர் சந்திக்கவுள்ளதாக அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

You May also like