ரணிலுக்கு போட்டியாக சஜித்:நாளை அதிரடி சந்திப்புக்கு ஏற்பாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் கட்சிக்குள் ஆதரவைத் திரட்டுவதற்காக நாளை வெள்ளிக்கிழமை ஏட்டிக்குப் போட்டியாக சந்திப்புக்களை நடத்த முடிவெடுத்துள்ளனர்.

இதற்கமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலரிமாளிகையில் நாளை முழுவதும் தனித்தனி சந்திப்புக்களை நடத்த ஒழுங்கு செய்திருக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை, பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்களை அலரிமாளிகைக்கு வரும்படி அழைப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனித்தனி சந்திப்புக்களை நடத்தவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் மற்றும் கூட்டணி அமைத்தல் தொடர்பிலான முடிவுகளை எடுப்பதற்கான வாக்கெடுப்பையும் நடத்த உத்தேசித்திருப்பதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

அதேதருணத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு போட்டியாக கட்சியின் பிரதித் தலைவரும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் கனவிலுள்ள அமைச்சருமான சஜித் பிரேமதாஸ நாளை வெள்ளிக்கிழமை நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் முக்கிய சந்திப்பிற்குத் தயாராகி வருகின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாளை காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்திற்கு அழைத்திருக்கும் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதித் தேர்தல் மற்றும் கூட்டணி அமைத்தல் தொடர்பாக அவர்களுடைய நிலைப்பாட்டை பெற்றுக்கொள்ளவிருப்பதாக அறியமுடிகின்றது.

எது எவ்வாறாக இருப்பினும், நாளைய தினம் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைகள் கூட்டங்களில் மாத்திரம் நேரத்தை செலவுசெய்யவுள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.

இதேவேளை இன்றைய தினமும் மாலை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுடன் பிரதமர் ரணில் அலரிமாளிகையில் முக்கிய சந்திப்பை நடத்தியிருப்பதாக தெரியவருகின்றது.

You May also like