மொட்டுக்கட்சி மாநாட்டிற்கு தமிழ்த் தலைவர்களுக்கு அழைப்பு இல்லை?

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கின்ற மாநாட்டிற்கு தமிழ்க் கட்சிகளின் சிலருக்கு இன்னும் அழைப்பு கிடைக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு – சுகததாஸ உள்ளக அரங்கில் பிரமாண்டமாக இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது.

இந்த நிலையில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்து வரும் முக்கியமான தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கு இதுவரை அழைப்பிதழ் கிடைக்காமை பெரும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

இருப்பினும் நேற்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும், ஸ்தாபகருமான முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச, அனைத்து உறுப்பினர்களுக்கும அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறினார்.

இருந்த போதிலும் முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் உள்ளிட்ட பலருக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று எமது செய்திப்பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதேபோல நேற்று முன்தினம் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் சந்திப்பை நடத்தியிருந்த வட-கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரான வரதராஜப்பெருமாளுக்கும் இன்னும் அழைப்பு கிடைக்கவில்லை என்று அவர் எமது செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தார்.

You May also like