கடந்த கால பாவங்களுக்கு மன்னிப்புக் கோருவாரா கோட்டா – ரணில்

பிறந்த எந்தவொரு பிரஜைக்கும் அச்சமின்றி வாழக்கூடிய சூழல் ஒன்றை உருவாக்குவதாக தெரிவித்துள்ள, பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச கடந்த காலத்தில் அவர் இழைத்த பாவங்களுக்கு மன்னிப்புக் கோருவாரா என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

வெள்ளை வான் கடத்தல்கள், ஊடகவியலாளர்களை படுகொலை செய்தமை உள்ளிட்ட கடந்த ஆட்சியின்போது இடம்பெற்ற தவறகளுக்கு மன்னிப்புக் கோருவதற்கு கோட்டாபய ராஜபக்ச தயாரா எனவும், பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பதுளை பிரதேசத்தில் இன்றைய தினம், அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

“பொதுஜன பெரமுனவின் சம்மேளனத்தில், அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவித்த கருத்து தொடர்பில் நான் சிறிது சிந்தித்து பார்த்தேன். அவர் “இந்த அன்னை பூமியில் பிறந்த எந்தவொரு பிரஜைக்கும் அச்சமின்றி, சந்தேகமின்றி வாழக்கூடிய சூழல் ஒன்று மீண்டும் உருவாக்கப்படும் என்பதை உறுதிப்படுத்துவோம்.” எனக் குறிப்பிடுகின்றனர்.

“நான் விசேடமாக குறிப்பிட வேண்டியது, பழைய தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பீர்களா இல்லையா? அச்சமற்ற, சந்தேகமற்ற சமூகம் ஒன்று உருவாகுமாயின், எக்னெலிகொட தொடர்பில் மன்னிப்பு கேட்பீர்களா? லசந்த தொடர்பில், ரவிராஜ் தொடர்பில், தாஜுடீன், உதயன் அலுவலகத்தை உடைத்தெறிந்து, ஊடகவியலாளர்களை தாக்கியமைத் தொடர்பில் மன்னிப்பு கேட்பீர்களா? ரத்துபஸ்வல விடயம், வெலிக்கடை சிறைச்சாலை தாக்குதல், வெள்ளை வான் சம்பவங்கள், ஷிரானி பண்டாரநாயக்கவi பதவி நீக்கியமை போன்ற அனைத்து விடயங்களுக்கும் மன்னிப்பு கேட்பீர்களா? என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனதுரையில் தெரிவித்துள்ளார்.

You May also like