பிரதேச சபைத் தேர்தலில், ஒரு வேட்பாளர், 40 கோடி செலவு

தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் செலவிட இயலுமான நிதித் தொடர்பிலான, வரையறையை ஏற்படுத்தும் சட்டத்தை விரைவாக நிறைவேற்றிக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக, நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான “பெப்ரல” அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவிக்கின்றார்.

பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் சாதாரண வேட்பாளர் ஒருவர் கூட 40 கோடி ரூபாயினை செலவிடும் நிலைமை காணப்படுவதாகவும் அவர் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார்.

“வேட்பாளர் ஒருவர் செலவிட இயலுமான நிதித் தொடர்பில் வரையறையை ஏற்படுத்தும் சட்டமொன்றை குறைந்தது அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னராவது நிறைவேற்றிக்கொள்ள நாம் எதிர்ப்பார்க்கின்றோம்.

“வேட்பாளர் ஒருவர் செலவு செய்ய இயலுமான நிதித் தொடர்பில் வரையறை இல்லாத நிலையில், வேட்பாளர்கள் மில்லியன் கணக்கில் செலவு செய்கின்றனர். இவ்வாறான பல சம்பவங்கள் தொடர்பில் நாம் நீதிமன்றத்தை நாடவுள்ளோம்.

“கடந்த பிரதேச சபைத் தேர்தலில், சுமார் 500 – 600 குடும்பங்கள் வசிக்கும் தனது தொகுதியில் 40 கோடி ரூபாயை செலவு செய்து பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார் ஒரு வேட்பாளர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா, 30 – 40 ஆயிரம் வரை செலவு செய்துள்ளார். இதன் மூலம் அவர் வெற்றிபெற்றுள்ளார்.

“ஆகவே வேட்பாளர் செலவிடக்கூடிய நிதித் தொடர்பில் வரையறை மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு வேட்பாளர் இவ்வாறு பல மில்லியன்களை செலவிடுவாராயின் அவர் அந்த பணத்தை உழைத்துக்கொள்ள எப்படியும் முயற்சிப்பார். அவரது நண்பர்கள் அல்லது உறவினர்கள் அவருக்கு நிதியுதவி அளிப்பார்களாயின் அவர்களுக்கு அதனைவிட பல மடங்கினை உழைப்பதற்கு அவர் உதவி செய்ய வேண்டியேற்படும். ஆகவே பொதுமக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் இந்த நிலைமை மாறவேண்டும்.” என அவர் குறிப்பிட்டார்.

You May also like