கோட்டாபயவின் வேட்புமனுவை ஏற்க தேர்தல் ஆணைக்குழு தயார் 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வேட்புமனுவை எந்த பிரச்சினையுமின்றி ஏற்றுக்கொள்வதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்ரிய வாக்குறுதி அளித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கும்,  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள  முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்குமிடையே  அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த வாக்குறுதியை அவர் வழங்கியுள்ளார்.
இந்தக்  கலந்துரையாடலின் போது தனது அமெரிக்க  குடியுரிமை  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தடையாகிவிடுமா  என்பது பற்றி தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரிடம்  கோட்டாபய ராஜபக்ஷ நீண்டநேரம்  கலந்துரையாடியுள்ளார்.
எனினும் வேட்புமனுவை தாக்கல் செய்யும்போது  அதனை எந்த பிரச்சினையும்  இன்றி ஏற்க மஹிந்த தேசப்பிரிய  உறுதி அளித்துள்ளார் என்று புலனாய்வு தகவல்கள் கூறியுள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின்  இந்த உறுதியை  அடுத்தே  கோட்டாபய ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் பணிகளை  தீவிரமாக்கினார்.
இவ்விருவருக்கும் இடையே இந்த சந்திப்பானது  மேஜர் ஜெனரல் கபில  ஹெந்தவிதரனவின்  கொழும்பிலுள்ள  இல்லத்தில் அண்மையில் இடம்பெற்றது.
தேர்தல்கள் ஆணைக்குழுத்  தலைவர் மஹிந்த தேசப்பிரிய  கல்விகற்ற  அம்பலாங்கொட  தர்மாஷோக்கா  வித்தியாலயத்தின் பழைய  மாணவரான  மேஜர்  ஜெனரல்  ஹெந்தவிதரான, கோட்டாபய ராஜபக்ஸவுக்கு மிக  நெருக்கமானவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like