ஐ.தே.கவின் வேட்பாளர் யார்? இரகசிய வாக்கெடுப்பு

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான, ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் இந்தவாரம் பெயரிடப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் திகதியை நிர்ணயிப்பதற்காக ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூட்டம் நேற்று முன்தினம் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க ஆகியோர் கூட்டணியின் சார்பில் பங்கேற்றனர்.

ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் அமைச்சர்களான மங்கள சமரவீர, கபீர் ஹாசீம், ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது பெரும்பாலும் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்த்த போதிலும் முடிவு எடுக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை கூட்டுவதற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இந்நிலையில், இதன்போது ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின்போது இதுத் தொடர்பில் அவதானம் செலுத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May also like