கோட்டாவை தோற்கடிக்கும் நோக்கில் ஜே.வி.பி களத்தில்

பொதுஜன பெரமுன கட்சியின் பொது வேட்பாளர், கோட்டாபய ராஜபக்சவை தோற்கடிக்கும் நோக்கிலேயே மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதித் தேர்தலில் தமது வேட்பாளரை களமிறக்கியுள்ளதாக தெரிவித்துள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான வாக்குகள் தமக்கு கிடைக்கப்பெறுவதை தடுக்கும் வியூகமாகவும் இது அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களிக்கும் ஒருவரின் இரண்டாவது விருப்பத்தெரிவு, ஐக்கிய தேசியக் கட்சியாகவே இருக்குமெனவும், அவர் சோஷலிச மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

“ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அந்தக் கட்சியுடன் தொடர்புகளைக் கொண்டுள்ள அமைப்புக்களின் ஒரேயொரு இலக்கு கோட்டாபய ராஜபக்சவை அல்லது எமது பொது வேட்பாளரை தோற்கடிப்பதே. கோட்டாபய எந்தவொரு கட்சியினதும் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளவில்லை.

“பொதுஜன பெரமுன கட்சியின், பொது வேட்பாளராகவே அவர் நியமனம் பெற்றுள்ளார். எதற்கு இவர்கள் அனைவரும் போட்டியிடுகின்றார்கள். மக்கள் விடுதலை முன்னணி ஏன் தனியாக போட்டியிடுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான வாக்குகள் எமக்கு அளிக்கப்படுவதை தடுக்கும் நோக்கிலேயே அவர்கள் போட்டியிடுகின்றார்கள்.

“அவர்கள் வெளிப்படையாகவே தெரிவிக்கின்றார்கள். உங்களுக்குத் தெரியும் மூன்று வாக்குகளை அளிக்க முடியும். முதல் வாக்கு மக்கள் விடுதலை முன்னணிக்கு, இரண்டாவது தெரிவு, ஐக்கிய தேசியக் கட்சிக்கு அளித்தேயாகவேண்டும். இல்லாவிடின் இந்த புதிய பொதுஜன பெரமுன கூட்டணியை தோற்கடிக்க முடியாது. கூட்டு எதிர்க்கட்சியின் மக்கள் அபிமான முகாமின் மக்கள் தலைவர் கோட்டாபய ராஜபக்சவை தோற்கடிப்பதற்காகவே யார் யாரோ எல்லாம் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May also like