ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்:சஜித் அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸ உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்தார்.

மாத்தறையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் எமக்கென்று ஒரு சிறந்த தாய்நாட்டை உருவாக்குவதற்கு மக்கள் தயாராக வேண்டும் என்ற அழைப்பையும் அவர் இதன்போது விடுத்தார்.

மாளிகையில் இருந்து அல்ல, வீடுகளுக்கு சென்று, வீதிகளுக்கு இறங்கி மக்களுடன் இணைந்து செயற்பட்டு சௌபாக்கியமான நாட்டை உருவாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டை காப்பாற்றிய இராணுவத்தினரை குப்பைகளை அகற்றவும், வீதிகளை சுத்தம் பண்ணவும் அனுமதிக்காமல், உயர்த்த இடத்தை அவர்களுக்கு வழங்குவதாகவும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ உறுதியளித்தார்.

ஊழலை துடைத்தெறியும் பணி அரச உயர்மட்டத்திலிருந்து ஆரம்பிப்பதாகவும் அதற்காக பட்டினியில் இருப்பதற்கும் தாம் தயார் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆட்சிக்கு வந்தவுடன் மாளிகை வாழ்க்கையை முற்றாக நிராகரிப்பதாகவும், மாளிகைகளில் தன்னை சந்திக்க மக்களுக்கு முடியாது எனவும், மாறாக கிராமங்களிலும், சாதாரண மக்களிடையேயும் தன்னைக் காணமுடியும் அமைச்சர் சஜித் கூறினார்.

பிரபுக்களின் குண்டு துளைக்காத வாகனத்தைப் பார்க்கிலும் கிராம சுகாதார நிலையங்கள், சாதாரண கிராமங்களிலுள்ள நிலையங்களும் தனக்கு முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.

மரணத்தைக்கூட பொதுமக்களுடன் அனுபவிப்பதற்கும் தாம் தயார் எனவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களான மங்கள சமரவீர, அஜித் பி. பெரேரா, ஹர்ஷ டி சில்வா, ஹரின் பெர்ணான்டோ, நாடாளுமன்ற உறுப்பினர்களான புத்திக பத்திரண உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

You May also like