கோட்டா–நாமல் கடும் மோதல்:தலையிட்டு தீர்த்த மஹிந்த

பொதுஜன முன்னணியின் இளைஞர் மாநாட்டில் ஊடகவியலாளர்களுக்கு எற்பட்ட அசௌகரிய நிலைக்காக பகிரங்க மன்னிப்பை கோருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நிராகரித்திருக்கின்றார்.

இதன் காரணமாக கோட்டாபய ராஜபக்சவுக்கும் நாமல் ராஜபக்சவுக்கும் இடையே கடும் சொற்போர் இடம்பெற்றிருப்பதாக அறியமுடிகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இளைஞர் மாநாடு அண்மையில் கொழும்பு – தாமரைத்தடாக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த நிகழ்வினை செய்தியாக சேகரிப்பதற்குச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற போர்வையில் அநாவசியமான இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதோடு மண்டபத்திற்குள் பிரவேசிப்பதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டது.

எப்படியோ வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதன் விளைவாகவே ஊடகவியலாளர்களுக்கு நிகழ்வினுள் செல்வதற்கு வழிபிறந்தது.

இந்த நிகழ்வு இடம்பெற்ற தினத்திற்கு அடுத்த தினம், அனைத்துப் பத்திரிகைகளிலும் இந்த நிகழ்வு குறித்த எந்தவொரு செய்தியும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை அழைத்து கடுமையாக திட்டியிருக்கின்றார் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச.

இந்த விவகாரம் உக்கிரமடைந்த நிலையில் தலையீடு செய்த எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, பொதுஜன முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஞாயிற்றுக்கிழமையே ஊடக சந்திப்பை நடத்தி பகிரங்க மன்னிப்பு கோரலை செய்யும்படி கூறிய பின்னரே பிரச்சினை முடிவுக்கு வந்ததாக அறியமுடிகின்றது.

You May also like