ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடத்தில்?

தனது பதவிக்காலம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்சநீதிமன்றத்தின் வியாக்கியானத்தை மீண்டும் ஒருதடவை பெறத் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

19ஆவது திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் என்ற போதிலும் 19ஆவது திருத்தத்திற்கு முன்னதாக அப்பதவிக்காலமானது 6 வருடங்களாகும்.

இந்த நிலையில் 19ஆவது திருத்தம் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கொண்டுவரப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் மாற்றம் எப்போதிருந்து ஆரம்பமானது என்ற நிலைப்பாட்டிற்கு அமைய ஜனாதிபதி இந்த வியாக்கியானத்தைப் பெற உத்தேசித்திருப்பதாகவும் அறியமுடிகின்றது.

இப்படியான நிலையில் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலானது அடுத்த வருடத்திற்கு பின்தள்ளப்படும் சூழ்நிலையும் ஏற்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கமைய நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாவிட்டால் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னரே தேர்தல் பெரும்பாலும் நடத்தப்படும் என்று அவர் ஆருடம் வெளியிட்டார்.

அதுமட்டுமன்றி நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் என்பனகூட ஏப்ரல் மாதத்திற்குப் பின்னரே நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

You May also like