மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் வெற்றிப்பாதை

பின்தங்கியிருந்த மலையக சமூகத்தின் கல்வியை முன்னேற்ற உதவிகரம் நீட்டும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் வெற்றிகரமாக  தனது 13 வருடங்களை பூர்த்தி செய்துள்ளது.

2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி செட்டியார் தெருவில் இளைஞர்கள் சிலரின் பங்குப்பற்றுதலுடன் இந்த மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் ஸ்தாபிக்கப்பட்டது.

தனராஜ், தவகுமார் ஆகிய இரண்டு இளைஞர்களின் தலைமைத்துவத்தின் கீழ் சுமார் 25 இளைஞர்கள் ஒன்றிணைந்து மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தை ஆரம்பித்து வைத்தார்கள்.

2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த மன்றம் படிப்படியாக தனது முன்னேற்ற பாதையை நோக்கி நகர்ந்திருந்தது.

முதல் மூன்று ஆண்டுகள் தலைவராக தவகுமார் பதவி வகித்திருந்தார், அடுத்த மூன்று ஆண்டுகள் தனராஜ் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டார். அதன் பின்னரான மூன்று ஆண்டுகள் சிவசுப்ரமணியம் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். அதன்பின்னர் சிவகுமார் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவராக செயற்பட்டார். மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தற்போதைய தலைவராக தேவராசன் செயற்பட்டு வருகின்றார்.

25 அங்கத்தவர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம், இன்று சுமார் 2000 பேரை கொண்ட ஒரு விருட்சமாக வளர்ந்திருக்கின்றது.

கூலித் தொழிலாளி முதல் முதலாளி வர்த்தகம் வரை எந்தவித பாகுபாடுமின்றி அங்கத்துவம் வகிக்கும் இந்த மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தில், மாதாந்தம் 200 ரூபா என்ற ஒரு சிறிய அங்கத்துவ கட்டணத்தையே அந்த அனைத்து தரப்பினரும் செலுத்தி வருகின்றனர்.

அதுமாத்திரமின்றி, நன்கொடைகள் ஊடாகவும் தமக்கான உதவித் திட்டங்கள் கிடைக்கப் பெறுவதாக அந்த மன்றத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் சாதனை.

01. மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மலையகத்தைச் சேர்ந்த சுமார் 500 மாணவர்களுக்கு பல்கலைக்கழக கல்விக்கான செலவீனங்களை ஏற்றுக்கொண்டது.
02. தரம் 5 புலமை பரிசில் பரீட்சை, சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகளுக்கான முன்னோடி பரீட்சைகளை நடத்தி மலையக மாணவர்களின் சித்தி பெறும் வீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
03. மலையகத்தில் கல்வியை ஊக்குவிக்க தொடர்ந்தும் பல்வேறுப்பட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
04. மலையகத்தில் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கவும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
05. சர்வதேச ஓட்டப் பந்தய வீரனான சண்முகேஸ்வரனை மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் அடையாளம் கண்டு, சர்வதேச மட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளது.
06. வீட்டிற்கு ஒரு பட்டதாரியை உருவாக்கும் முயற்சிகளில் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் இன்று ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், தனது 13 வருட நிறைவு மற்றும் 14ஆம் வருடத்தில் கால்தடம் பதிவுக்கும் மகிழ்ச்சிகரமான தருணத்தை மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் கடந்த 26ஆம் திகதி கொண்டாடியது.

மலையகத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள், தொழிலதிபர்கள், ஊடகவியலாளர்கள், மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் அங்கத்தவர்கள் என பெருந்திரளானோர் கலந்துக்கொண்டிருந்தனர்.

தனது 13 வருட பூர்த்தியை முன்னிட்டு, 13 வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள பாடசாலைகளுக்கான உதவித் திட்டங்களை மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் வழங்கி வைத்தது.

எதிர்வரும் காலங்களிலும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் பணிகள் தொடரட்டும்….

நன்றி : http://www.trueceylon.lk/

 

You May also like