ஜனாதிபதி மைத்திரி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு இதோ

2020ஆம் ஆண்டிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே ஆட்சியமைக்கும் என்ற அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்தார்.

வடக்கிலுள்ள தமிழ்த் தலைவர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியும், எதிரணியினரும் இரகசிய பேச்சுக்களை தேர்தலை இலக்காகக் கொண்டு ஆரம்பித்திருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி சிறிசேன, அவர்களுக்கு எந்தவொரு திட்டமும் கிடையாது எனவும் விமர்சித்தார்.

மத்திய வங்கி ஊழல் மோசடியுடன் தொடர்புடைய முன்னாள் வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரரை இலங்கைக்கு அழைத்துவருவதற்கான ஆவணங்கள் தயாராகிவிட்டதாகவும், இந்த மோசடிக்குப் பின்னால் இருந்த மற்றும் பொறுப்பு கூறவேண்டியவர்களை விரைவில் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதாகவும் உறுதியளித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது சம்மேளனம் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

தவளைகளைப் போல கட்சி தாவுவோர் நாடு குறித்து சிந்திப்பதில்லை. மாறாக தங்களுக்கான அமைச்சுக்கள், சொகுசு வசதிகள் என்பவற்றையே நினைக்கிறார்கள். இதற்கே மக்கள் தீர்வுகாண வேண்டும். 2015ற்குப் பின்னர் அமைக்கப்பட்ட புதிய அரசாங்கத்தில் எனக்குத் தெரியாமலேயே பலவற்றை செய்தார்கள். புதிய லிபரல்வாதம் இலங்கைக்கு பாதகமாகும்.
இந்த நாட்டில் ஊழல்மிகு அரசியல்வாதிகள் உள்ளனர். அவர்களுக்கு மதம், கலாசாரம், கட்சி இல்லை. அவர்களே இன்று ஓரிடத்திற்கு சேர்ந்துள்ளனர். கடந்த 04 வருட தமது ஆட்சிகாலத்தில் இவர்களுக்கு எதிராகவே போராடினேன். ஆட்சிசெய்யவில்லை.

எங்கே அதிகமான ஊழல்கள் உள்ளன. கொழும்பு மாநகர சபை முதல் மாகாண சபைகள் அனைத்திலும் பிரதேச சபை வரையிலும் ஊழல்மோசடிகளே நிரம்பியுள்ளன. இதன் பொறுப்புக்களை அரசாங்கமும் எதிர்கட்சியுமே ஏற்க வேண்டும். இருதரப்புக்கும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியவில்லை.

மத்திய வங்கி மோசடியாளர்கள் அரசிலிருந்து துடைத்தெறிய வேண்டும். இதுகுறித்த இன்னும் பல விடயங்கள் எதிர்வரும் நாட்களில் அம்பலமாகும். அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்துவருவதற்கான ஆவணங்கள் தயார். அவரை விடவும் அதனுடன் தொடர்புபட்ட உயர் பதவிகளில் உள்ளவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்கான தயார்படுத்தலும் நிறைவடைந்துவிட்டது.

மாகாண சபைத் தேர்தலுக்கான ஆவணங்களை தயார்படுத்தல் வழங்கலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தவறிவிட்டதால் அவரே தேர்தல் நடத்தாமைக்கான பிரதான பொறுப்பாளி.

அரச தலைவர்களும் எதிர்கட்சியினரும் வடக்கிலுள்ள தமிழத் தலைமைகளுடன் இரகசிய பேச்சுக்களை நடத்திவருகின்றனர். அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்காக கோடிக்கணக்கிலான பணத்தை விரயம் செய்தாலும் ஒன்றும் செய்யவில்லை. இந்த நிலையில் இரகசிய பேச்சுக்களை மீள ஆரம்பித்துள்ளனர். இவர்களுக்கு எந்தவொரு திட்டமும் கிடையாது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தெரிவாகும் ஜனாதிபதிக்கு 19ஆவது திருத்தத்தின் ஊடாக எந்த அதிகாரமும் கிடையாது. பாதுகாப்பு அமைச்சும் கிடையாது. அனைத்தும் பிரதமருக்கே சாரும். இதுகுறித்து ஊடகங்கள், மக்கள், அரசியல் தலைவர்கள் பேசுவதில்லை.

ஜனாதிபதி தேர்தல் குறித்தே பேசுகின்றனர். ஆனால் 2020இல் ஜனாதிபதி அல்ல, நாட்டை பிரதமரே பொறுப்பேற்பார். அதனால் ஜனாதிபதி நியமிப்பதில் அல்ல, பிரதமரை நியமிப்பதிலேயே சுதந்திரக் கட்சி கவனம் செலுத்துகிறது. எனது அரசாங்கத்திலேயே அரச பயங்கரவாதமான துப்பாக்கிப் பிரயோகம் என்பன அரச தரப்பிலிருந்து இடம்பெறவில்லை. வீடுகள், ஊடக நிறுவனங்கள் மீது தீ வைக்கவில்லை. இராணுவத்தினர் மீதும் எந்தக் குற்றச்சாட்டும் எனது ஆட்சியில் முன்வைக்கவில்லை.

இந்த ஆட்சிகாலத்தில் ஊழல் மோசடிகளுக்கு எதிராக தடுப்பு முயற்சிகளை எடுத்தபடியினால்தான் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்று பலர் ஆடைகளுடன் நடமாடுகின்றனர். இல்லாவிட்டால் கோவணங்களும் அவர்களுக்கு மிஞ்சியிருக்காது. 2020ஆம் ஆண்டிலும் சுதந்திரக் கட்சியே ஆட்சியமைக்கும் என்று ஜனாதிபதி கூறினார்.

You May also like