பலாலி விமான நிலையம் சென்ற அர்ஜுன ரணதுங்க

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அங்கு இடம்பெறுகின்ற அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான குழுவினர் இன்று வியாழக்கிழமை நேரில் ஆராய்ந்தனர்.

அமைச்சர் தலைமையில் 80 பேர் கொண்ட குழுவினர் இதுதொடர்பில் ஆராய்ந்தனர்.

யாழ்ப்பாணம் பலாலி விமானத் தளம் பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பலாலி பிராந்திய விமான நிலையம் ஒக்டோபர் 15ஆம் திகதி சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்படுகிறது. அன்றிலிருந்து இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

விமான நிலைய அபிவிருத்தியின் போது ஓடுபாதைகள் சீரமைப்பு செய்யப்படுவதுடன் பயணிகள் விமான நிலையத்துக்குள் வருவதற்கு காங்கேசன்துறை பக்கமாக உள்ள வீதி சீரமைக்கப்படுகிறது.

இந்த அபிவிருத்திப் பணிகளை பார்வையிட கொழும்பில் இருந்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான குழுவினர் இன்று காலை பலாலிக்கு வருகை தந்தனர்.

அவர்களுடன் வந்த குழுவில் சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள், சுங்கத் திணைக்கள அதிகாரிகள், பொறியியலாளர்கள் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலர் சிவசிறி ஆகியோர் கலந்து கொண்டனர்.

You May also like