ரணில் முன்பாக கபீர் ஹாஷிம்-லக்ஷ்மன் கிரியெல்ல மோதல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாஷிமுக்கும், சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை மிகப்பெரிய மோதல் இடம்பெற்றுள்ளது.

அலரிமாளிகையில் இன்று காலை இடம்பெற்ற கட்சி சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பினிடையே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்தக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.

கடந்த 2018ஆம் ஆண்டு மைத்திரி – மஹிந்த தலைமையிலான அரசியல் சூழ்ச்சி இடம்பெற்ற காலத்திலும், அதன் பின்னரும் அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ, சந்திராணி பண்டார, கபீர் ஹாஷிம் உள்ளிட்டவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இரகசிய பேச்சுக்களை நடத்தி கட்சியை காட்டிக்கொடுத்ததாக அமைச்சர் கிரியெல்ல இன்றைய சந்திப்பின்போது குற்றஞ்சாட்டினார்.

அமைச்சர் கபீர் ஹாஷிமை இதன்போது வன்மையாகக் கடிந்துகொண்ட சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, மிகவும் கடுமையான வார்த்தைப் பிரயோகத்தைக் கொண்டு தாக்கியதாக அறியமுடிகின்றது.

இதனால் முழு அலரிமாளிகை சந்திப்பு மண்டபமும் போர்க்களமாக மாறிய நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஏனைய சிரேஷ்ட உறுப்பினர்கள் தலைமையிலான பிரதமர் ரணிலும் வேடிக்கை பார்த்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீயெல்லாம் ஒரு மனிதனா? வெட்கமில்லையா? ஆண்மகனா நீ? என்ற கடுமையான சொற்பிரயோகத்தை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல பயன்படுத்தியிருப்பதாக அந்த சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் ஒருவர் எமது செய்தித்தளத்திற்குத் தெரிவித்தார்.

இறுதியில் பொறுமையை இழந்த அமைச்சல் கபீர் ஹாஷிம், கதிரையிலிருந்து எழுந்து கடுங்கோபத்துடன் வெளிநடப்பு செய்திருக்கின்றார்.

You May also like