திருச்சி – மணப்பாறை – நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளை குழிக்குள் வீழ்ந்த சிறுவனை மீட்கும் பணிகள் 36 மணித்தியாலங்கள் கடந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ரில் இயந்திரத்தின் மூலம், சிறுவன் வீழ்ந்துள்ள ஆழ்துளை குழிக்கு அருகில் மற்றுமொரு குழி தோண்டப்பட்டு வருகின்றது.
பாறைகள் காணப்படுகின்றமையினால், குழி தோண்டும் நடவடிக்கைகளில் சற்று தாமதம் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுவனை மீட்கும் வகையில் அதிவலு கொண்ட மற்றுமொரு ரில் இயந்திரமொன்று வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில மணித்தியாலங்களில் அந்த இயந்திரம் சம்பவ இடத்தை வந்து சேரும் எனவும் இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆழ்துளை குழிக்கு அருகில் தோண்டப்படும் குழி சுமார் 100 அடி வரை தோண்டப்படவுள்ளது.
85 அடி ஆழத்தில் சிக்குண்டுள்ள சிறுவனை, தோண்டப்படும் குழியின் ஊடாக மீட்புப் பணியாளர்கள் சென்று மீட்கவுள்ளனர்.
தோண்டப்படும் குழிக்கும், சிறுவன் சிக்குண்டுள்ள குழிக்கும் இடையில் சுரங்கமொன்றை அமைத்து அதனூடாக சிறுவன் மீட்கப்படவுள்ளான்.
இதேவேளை, சுஜித்திற்கு தேவையான ஓட்சிசன் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.