மீரியபெத்த பேரவலம்…….இன்றுடன் 5 ஆண்டுகள்……!

பதுளை கொஸ்லாந்தை – மீரியபெத்தவில் மண்சரிவு ஏற்பட்டு – சிறார்கள் உட்பட 37 இற்கும் மேற்பட்டோர் மண்ணுக்குள் புதையுண்டு பலியான பெருந்துயர் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 5 ஆண்டுகள்….

2014 – இதே நாளில் ஒரு தோட்டமே மண்ணுக்குள் புதையுண்டது. விழிமூடி விழி திறப்பதற்குள் பலரின் வாழ்வே இருண்டுபோனது.

வலிகள் தந்த அந்த பெருந்துயர் சம்பவத்தை வெறும் வார்த்தைகளால் எடுத்துரைக்கமுடியாது. இன்று நினைத்தாலும் நெஞ்சுக்குள் துன்ப அலைகள் முட்டிமோதுகின்றன.

ஆம். உறவுகள், உடமைகள் என அனைத்தையும் இழந்து உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு சிலர் அங்கிருந்து நடைப்பிணங்களாக – அநாதைகளாக வெளியேறினர். மேலும் சிலரின் எதிர்காலமோ சூனியமானது.

மலையக மண்ணில் அரங்கேறிய இந்த பெருந்துயர் சம்பவத்தை எம்மால் ஒருபோதும் மறக்கமுடியாது என்பதுடன், மனதுக்குள் ஏற்பட்ட வடுக்களும் இன்னும் ஆறவில்லை.

காடாக காட்சிதந்த நாட்டை கடின உழைப்பால் செழிப்பாக்கிய எம் மக்களுக்கு நிம்மதியாக வாழ்வதற்குகூட பாதுகாப்பான இடம் இருக்கவில்லை என்பது வலிசுமந்த வரலாறாகும்.

வாழும்போது மட்டுமல்ல செத்த பிறகும், உடலை மண்ணுக்கு உறமாக்கிவிட்டே, மீரியபெத்த மக்களின் ஆத்மா விண்ணுலகம் சென்றது.

அழுது – புலம்பி என்ன செய்வது? மாண்டவர்கள் மீண்டு வருவார்களா என்ன? எனினும், மீண்டும் ஒருமுறை இப்படியான அவலம் அரங்கேறாமல் மக்களை பாதுகாக்கவேண்டியது அரசின் பொறுப்பாகும்.

ஆனால், அரசு தனது பொறுப்பை உணருமா என்ற கேள்விக்கு விடைதேட முடியாமல் மனம் விம்மி அழுகின்றது. மீரியபெத்த சம்பவத்தை படிப்பினையாக எடுத்திருந்தால் புளத்சிங்கள பகுதியில், அரநாயக்கவில் அனர்த்தங்கள் அரங்கேறியிருக்குமா என்ன?

எல்லாம் கடந்து போகும்……..

மீரியபெத்த பேரவலத்தில் பலியான சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், அவர்களின் ஆத்மா இளைப்பார எல்லாம்வல்ல எம்பெருமானை பிரார்த்திக்கின்றேன்.

சம்பவம் இடம்பெற்று 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் அங்கு வாழும் மக்களுக்கு இன்னும் நீதி நிவாரணம் கிடைக்கவில்லை.

அதுமட்டுமல்ல பெருந்தோட்டப்பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு உரிய வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும்.

You May also like