தமிழ் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிப்போம்: சவால் விடுத்தார் மஹிந்த!

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அவசியமாகின்ற வகையில் நாட்டைப் பிளவடையச் செய்வதற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு இடமளிக்கக்கூடாது என்று எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களிலுள்ள தமிழ் மக்கள் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது கசப்பான சிந்தனையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதனால் இம்முறை பொதுஜன முன்னணிக்கு வாக்களிக்க அவர்கள் தீர்மானித்துவிட்டதாக தென்னிலங்கை மக்களுக்குக் கூறினார்.

தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளை உள்ளடக்கிய வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த 05 தமிழ்க் கட்சிகள், அவற்றை 13 அம்சக் கோரிக்கைகளாக முன்நிறுத்தியதோடு அவற்றை ஏற்றுக்கொள்கின்ற வேட்பாளருக்கே தங்களது ஆதரவை அளிப்பதாகவும் அறிவித்திருந்தன.

இருந்த போதிலும் பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் அவற்றை நிராகரித்துவிட்டனர்.

எனினும் வவுனியாவில் நேற்று முன்தினம் கூடிய இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனாதிபதி தேர்தலில் புதியஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்க தீர்மானம் எடுத்ததோடு, தேர்தலில் யாரை வெற்றிபெற வைக்கக்கூடாது என்ற முடிவில் கட்சி உறுதியாக இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேற்று தெளிவுபடுத்தல் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், தென்னிலங்கையின் காலி – அஹ{ங்கல்ல பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, நாட்டைப் பிரிப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த நிபந்தனைகளை சஜித் பிரேமதாஸ ஏற்றுக்கொண்டுவிட்டதாக சாடினார்.

You May also like