அமெரிக்க ஒப்பந்தத்திற்கு எதிரான மனு தொடர்பில் வெளிவந்த நீதிமன்ற அறிவிப்பு

அமெரிக்காவுடன் இலங்கை அரசாங்கம் செய்துகொள்ளவுள்ள மில்லேசியம் சவால் ஒப்பந்தத்தை தடுத்துநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பௌத்த அமைப்புக்கள் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் அடுத்த விசாரணைக்கான திகதியை அறிவித்துள்ளது.

அமெரிக்காவுடன் எம்.சி.சி என்கிற மில்லேசியம் சவால் ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் செய்துகொள்ளவுள்ளதாக வெளியான தகவலை அடுத்து மேற்குலகு கடும்போக்குவாதிகள், தென்னிலங்கையில் உள்ள கடும்போக்குவாத பௌத்த அமைப்புக்கள் மற்றும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினரால் கடும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதனையடுத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் சில பௌத்த அமைப்புக்கள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கலும் செய்தன.

இந்த மனுவை விசாரணைக்கு எடுப்பதா இல்லையா என்கிற தீர்மானத்தை எடுப்பதற்காக உச்சநீதிமன்ற நீதியரசர் புவனேக அலுவிஹார தலைமையிலான மூவரடங்கிய நிதியரசர்கள் குழாம் இன்றைய தினம் கூடியது.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக நிதியமைச்சர் உட்பட அமைச்சரவை பெயரிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடனான எக்ஸா என்கிற உடன்படிக்கை 2007ஆம் ஆண்டில் அமெரிக்காவுடன் இலங்கை அரசாங்கம் செய்துகொண்டிருப்பதாகவும், 2017ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தம் விஸ்தரிப்பு செய்யப்பட்டதாகவும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எம்.சி.சி என்கிற மில்லேனியம் சவால் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டால் இலங்கையை அமெரிக்கா ஆக்கிரமித்துக்கொண்டு நாட்டு மக்களின் உரிமைகளைப் பறித்துக்கொள்ளும் நிலைமை உருவாகும் என்றும் அதனூடாக நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்படும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மனுமீதான விசாரணையை எதிர்வரும் 13ஆம் திகதி நடத்த இன்றைய தினம் கூடிய மூவரடங்கிய உச்சநீதமன்ற நீதியரசர்கள் குழாம் தீர்மானித்து அறிவித்தது.

இதேவேளை அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்படவுள்ள எம்.சி.சி ஒப்பந்தத்திற்கு எதிராக கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உடுதும்பர காஷியப்ப தேரர் நேற்றுக்காலை முதல் நடத்திவந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரால் இந்த ஒப்பந்தம் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்துமாக இருந்தால் தடுத்து நிறுத்தப்படும் என்று வழங்கிய எழுத்துமூல வாக்குறுதியை அடுத்தே இந்த போராட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May also like