பிரபாகரனின் நோக்கத்தை நிறைவேற்றும் சம்பந்தன்: கோட்டா சாட்டையடி

தமிழீழ விடுதலைப் புலிகளின் நோக்கத்தை புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், சமஸ்டிக்கு அப்பாற்சென்ற நாட்டைப் பிளவுபடுத்தும் வகையிலான தீர்வுத்திட்டங்கள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அன்னச் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்ததோடு நேற்றைய தினம் அதனை உத்தியோகபூர்வமாக ஊடக அறிக்கை மூலம் அறிவித்திருந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த அறிவிப்புக்கு எதிராக வடக்கு, கிழக்கிலும் அதேபோல பலதரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இரத்தினபுரியில் நேற்றைய தினம் மாலை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, நாட்டைப் பிரிப்பதற்கான யோசனையை சஜித் பிரேமதாஸ ஏற்றுக்கொண்டதினால்தான் அவருக்கான ஆதரவை கூட்டமைப்பினர் அறிவித்திருப்பதாக சாடினார்.

You May also like