புளியங்குளம் வைத்தியசாலை மருத்துவர் மீது தாக்குதல் முயற்சி:வைத்திய சேவைகள் முடங்கின

வவுனியா புளியங்குளத்தில் பிரதேச வைத்தியசாலை வைத்தியரை ஒருவர் தாக்க முயற்சித்தமையினால் புளியங்குளம் வைத்தியசாலையின் வைத்திய சேவைகள் முடங்கியுள்ளன.

கடந்த வியாழக்கிழமை இரவு புளியங்குளம் வைத்தியசாலையில் கடமை புரியும் பெண் வைத்தியரை இனந்தெரியாத ஒருவர் தாக்க முயற்சித்துள்ளார்.

இதன் காரணமாக அச்சமடைந்த வைத்தியர் கூக்குரல் எழுப்பவே அவர் தப்பியோடியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னரும் புளியங்குளம் வைத்தியசாலையில் வைத்தியருடன் சிலர் முரண்பட்டு தாக்க முற்பட்ட நிலையில் பொலிஸார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் பிணையில் விடுவித்திருந்தனர்.

இந்நிலையில் வியாழக்கிழமையும் வைத்தியர் மீது தாககுதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டமையினால் குறித்த வைத்தியர் தொடர்ந்தும் அங்கு பணியாற்ற அச்சுறுத்தல் உள்ளமையினால் புளியங்குளம் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

இவ்விடயம் தொடடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வவுனியா மாவட்ட பிரதிநிதிகளிடம் கேட்டபோது வைத்தியர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ள முற்பட்டமையினால் வைத்தியரை நாம் அங்கு கடமையாற்றுவதில் இருந்து வெளியேற்றியுள்ளோம்.

நாம் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொண்டு வைத்திய சேவையை புளியங்குளத்தில் மேற்கொள்ளாதுள்ளோம்.
எதிர்வரும் காலங்களில் அச்சுறுத்தல் நிலைமைகள் தொடராது என்பதனை எமக்கு உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

You May also like