சஜித், மகாநாயக்க தேரர்களுக்கு எழுதிய கடிதத்தில் என்ன இருந்தது?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தேர்தலில் வெற்றிபெற்றாலும், அவரது இரட்டைக் குடியுரிமை காரணமாக பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சி மற்றும் பௌத்த சாசனத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்று எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தரப்பினர் கூறிவருவதாக தெரிவிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அது முற்றிலும் தவறான பிரசாரம் என்றும் கூறினார்.

ஒற்றையாட்சி மற்றும் பௌத்த சாசனத்திற்கு அரசியலமைப்பில் உள்ள முதன்மைத்துவம் என்பன புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நீக்கியிருப்பதாகவும், சமஸ்டிக்கு அப்பாற்சென்று நாட்டைப் பிரிக்கின்ற தீர்மானங்கள் அதில் இருப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, மற்றும் பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

எனினும் அந்தக் குற்றச்சாட்டை புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளரான சஜித் பிரேமதாஸ தரப்பினர் பகிரங்கமாக நிராகரித்துள்ளனர்.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினரால் பிரசாரப்படுத்தப்பட்டு வருகின்ற நாட்டைப் பிளவடையச் செய்யும் யோசனைகள் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லை என்றும், ஒற்றையாட்சி மற்றும் பௌத்த சாசனத்தை பாதுகாப்பு செய்கின்ற உறுதிகள் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து தெளிவுபடுத்தல் கடிதமொன்றை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, மாகாநாயக்க தேரர்களுக்கு இன்றைய தினம் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஊடாக வழங்கியுள்ளார்.

இதன்படி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, இன்று பகல் மல்வத்துப்பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரரை சந்தித்து ஆசிபெற்றார்.

அதன் பின்னர் குறித்த கடிதத்தில் உள்ளவற்றை அமைச்சர் சம்பிக்க ரணவக்க, மகாநாயக்க தேரருக்கு விளக்கம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர், பௌத்த சாசனத்தையும், ஒற்றையாட்சியையும் ஜனாதிபதி வேட்பாளர் பாதுகாப்பார் என்பது உறுதி என்று கூறினார்.

You May also like