பாதுகாப்பு கோரி நூரி தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலை அடுத்து கேகாலை – தெரணியகல− நூரி பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்கள் தொடர்ந்தும் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

தேர்தல் முடிந்த பின்னரும் அச்சத்தில் தொடர்ந்தும் உள்ளதை அடுத்து தமக்கு பாதுகாப்பை வழங்குமாறு அந்த பகுதி மக்கள் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது குறித்த தோட்டத்திற்குள் சென்ற இனந்தெரியாத நபர்களால் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கடுந்தொனியில் கேட்டு நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் பொலிஸ் விசாரணை ஆரம்பமாகிய போதிலும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் தங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நூரி தோட்ட மக்கள் இன்று வியாழக்கிழமை கடிதம் அனுப்பிவைத்துள்ளனர்.

You May also like