வெள்ளைவான் கடத்தல் என பலவற்றை அம்பலமாக்கிய அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஷாணி அபேசேகர, அந்த திணைக்களத்தின் திட்டமிடப்படும் குற்றங்களைத் தடுக்கும் பிரிவின் பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா, உதவி பொலிஸ் பரிசோதகர் திசேரா ஆகியோர் திடீரென இடமாற்றப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை பொலிஸ் பரிசோதகரான நிஷாந்த டி சில்வா எமது செய்தி இணையத்தளத்திற்கு உறுதிப்படுத்தினார்.

வெள்ளை வான் கடத்தல், ஊடகவியலாளர்கள் படுகொலை உட்பட கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து வழக்கு விசாரணைகளில் திறமையாக செயற்பட்டு இரகசியமான தகவல்களை அம்பலப்படுத்திய இவர்களுக்கே தற்போது இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.

தற்போதைய பிரதமரான மஹிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சிக்காலத்தில் கொழும்பு தெஹிவளை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களில் வெள்ளை வானில் கடத்தி காணாமலாக்கப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேரது வழக்கு விசாரணையில் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் பலதரப்பட்ட இரகசிய தகவல்களை நிஷாந்த டி சில்வா, மிகவும் துல்லியமான விசாரணைகளில் அம்பலப்படுத்தியிருந்தார்.

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி அரசியலமைப்பு சூழ்ச்சியின் ஊடாக இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தின்போது பிரதமராகிய மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வாவை குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வேறொரு திணைக்களத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டது.

இருந்த போதிலும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலையீட்டினால் அந்த இடமாற்ற உத்தரவு இரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் ராஜபக்சவினரது அரசாங்கம் இலங்கையில் மலர்ந்துள்ள நிலையில், தற்போது குறித்த மூன்று பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட ஐ.பி. நிஷாந்த டி சில்வா, தங்களுக்கு இன்னும் உத்தியோகபூர்வமாக இடமாற்றம் பற்றிய கடிதம் கிடைக்கவில்லை என்று கூறினார்.

எவ்வகையான இடமாற்றம் என்றாலும் அரசாங்கத்தின் உத்தரவுக்கு தாம் கட்டுப்படுவதாகக் கூறிய அவர், இனிவரும் காலங்களில் எவ்வாறு விசாரணைகள் அமையப்போகின்றன என்பது பற்றி தனக்குக் கூறமுடியாது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஷாணி அபேசேகரவுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதியாக இருந்தபோது அவரது பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த திலகரத்ன என்பவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

You May also like