புறக்கணிக்கப்பட்டாரா சஜித்? தொடரும் சர்ச்சை!

அரசியலமைப்புச் சபைக் கூட்டம் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாஸவுக்கு இதுவரை அழைப்பு கிடைக்காதிருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாஸ, கட்சியின் உறுப்பினர்கள் கூடி எதிர்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கட்சியினால் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு விடுக்கப்பட்ட கடிதத்தையும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்றுக்கொண்டிருக்கின்றார்.

எனினும் நாடாளுமன்றம் எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதியே கூடுகின்ற நிலையில், அன்றைய தினமே சஜித் பிரேமதாஸவை உத்தியோகபூர்வமாக எதிர்கட்சித் தலைவராக அறிவிப்பதாகவும் சபாநாயகர் தனது பதில் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.

இதன் காரணமாக நாளை கூடவுள்ள இந்த வருடத்திற்கான இறுதி அரசியலமைப்புச் சபைக் கூட்டத்திற்கு இதுவரை சஜித் பிரேமதாஸவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளைய கூட்டத்தில் கலந்துகொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

You May also like