ஐ.எஸ் தீவிரவாதத்தை ஒழிப்பேன்: மஹிந்த அதிரடி சவால்!

இந்தியா, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் ஐ.எஸ் தீவிரவாதக் கட்டமைப்பை அழைத்துக்காட்டுவேன் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச சவால் விடுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள பாதுகாப்புக் கல்லூரியில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கு தரை,கடல் மற்றும் விமானப்படை மூலமாக தோற்கடிக்க முடிந்த போதிலும் தற்போது அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினை புலனாய்வுக் கட்டமைப்பின் ஊடாகவே தோற்கடிக்க முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்த ஆண்டில் இலங்கையிலிருந்து இரண்டு தடவைகள் படகுகள் மூலம் இந்தியா செல்ல அடிப்படைவாத அமைப்பினர் முயற்சித்த போதிலும், அதனை முன்னதாகவே சுதாரித்துக்கொண்ட இந்தியா, அங்கு பாதுகாப்பை பலப்படுத்தியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.

மும்பை தாக்குதலில் இந்தியர்கள் எவரும் தொடர்புபட்டிருக்கவில்லை. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் முழுமையாக இலங்கையர்களே பங்கேற்றிருந்தமை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பானது, இந்தியா, இலங்கைக்கு மட்டுமன்றி, மாலைதீவு, பங்களாதேஷ், மலேசியா போன்ற நாடுகளுக்கும் இன்று அச்சுறுத்தலாகவே உள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை கடந்த ரணில்-மைத்திரி அரசு படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினரை பலவீனப்படுத்தியதாகவும், பலர் போலிக் குற்றச்சாட்டுக்களினால் சிறைகளில் அடைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச, படையினருக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானங்கள், அநீதிகளைத் தடுத்து அவர்களுக்கு நட்டஈட்டை புதிய அரசாங்கம் வழங்கும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

You May also like