கருணை கொலை கோரி இலங்கை தமிழர் தமிழகத்தில் மனு!

25 ஆண்டுகளுக்கு மேலாக சேலத்தில் வசித்து வருகிறேன். தற்போது குடியுரிமை சட்டத்திருத்தத்தால் எனக்கு இந்திய குடியுரிமை வழங்காவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள் என சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இலங்கை தமிழ் இளைஞர் மனு அளித்தார்.

கடந்த 2015-ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் மசோதா இரு அவைகளில் நிறைவேற்றப்பட்டு சட்டமாகிவிட்டது.

இதில் அகதிகளாக வந்துள்ள இலங்கை தமிழர்கள் சேர்க்கப்படவில்லை என தமிழ் அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தனக்கு குடியுரிமை வழங்காவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள் என சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறுகையில், எனது தாய், தந்தை இலங்கையில் இனப்போர் நடந்ததால் கடந்த 1990ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வந்துவிட்டனர்.

அது முதல் சேலம் மாவட்டம் பவளத்தானூர் அகதிகள் முகாமில் இருந்து வருகிறோம். நான் 1991-ஆம் ஆண்டு பிறந்தேன். நான் தமிழகத்திலேயே படித்து பட்டம் பெற்றுள்ளேன். இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தால் இந்திய குடியுரிமை உள்பட அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு உள்ளது.

எனவே என்னை கருணை கொலை செய்துவிடுமாறு அவர் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு குறித்து அந்த இளைஞர் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழகத்திலேயே பிறந்து இந்தியாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன்.

எனக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது, மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது.இது போன்ற நிலை யாருக்கும் வரக் கூடாது. கருணை கொலை செய்துவிடுமாறு ஆட்சியருக்கு மட்டுமில்லாமல் ஜனாதிபதி , தமிழக ஆளுநர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளேன் என்றார்.

THANKS : https://tamil.oneindia.com/

You May also like