வீட்டு விவகாரம்:சம்பந்தனுடன் மோதும் பிக்கு!

ரணில்-மைத்திரி அரசாங்கத்தினால் எந்த அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு சொகுசான உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டது என சிங்கள ராவய தேசிய அமைப்பின் தலைவரான அக்மீமன தயாரத்தன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த கேள்வியை முன்வைத்தார்.

சொகுசான இல்லம் உட்பட சம்பந்தனுக்கு பணியாற்ற 05 அரச ஊழியர்களும் கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுகுறித்து ஐக்கிய தேசியக் கட்சியினர் தெளிவுபடுத்தலை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கடந்த ஐக்கிய தேசிய முன்னணி விசேட அமைச்சரவை தீர்மானம் ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இ.சம்பந்தனுக்கு எதிர்கட்சித் தலைவருக்குரிய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியிருக்கின்றது.

இதற்கான விசேட அமைச்சரவை பத்திரத்தை முன்னாள் காணி மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக்க 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 26 ஆம் திகதி சமர்ப்பித்திருந்தார்.

இதற்கமைய கொழும்பு 7, மாகமசேகர மாவத்தையில் அமைந்துள்ள பி-12 என்ற எதிர்கட்சித் தலைவருக்குரிய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை முன்னாள் எதிர்கட்சித் தலைவரான சம்பந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக நீடிக்கும் வரை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி ஒன்றரை ஏக்கர் விஸ்தீரனமான காணியில் அமைந்துள்ள இந்த வாசஸ்தளத்தை பராமரிப்பதற்காக பராமரிப்பாளர் ஒருவர், பூங்கா பராமரிப்பாளர்கள் இருவர், உள்ளக பராமரிப்பாளர்கள் இருவர் அடங்கலாக ஐந்து பணியாளர்களும், அவர்களுக்கான சம்பளக் கொடுப்பனவும் மற்றம் வாசஸ்தலத்தை பராமரிப்பதற்கான செலவீனங்களை காணி மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சு ஏற்றுக் கொண்டிருக்கின்றது.

அதில் நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகளுக்காக சம்பந்தன் வழங்கும் மகத்தான பங்களிப்பிற்காக அவருக்கு இதுபோன்ற வசதிகளை செய்துகொடுப்பது அரசாங்கத்தின் கடமையும், பொறுப்புமாகும் என்றும் கயந்த சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May also like