சுவிஸ் தூதரக ஊழியருக்கு நிபந்தனை; கைத்தொலைபேசியும் ஒப்படைப்பு

சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் பணிபுரியும் உள்ளூரைச் சேர்ந்த பெண் பணியாளரான கானியர் பெனிஸ்டர் பிரான்சிஸ் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆட்சிமாற்றத்தை அடுத்து கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறிய சுவிஸர்லாந்து தூதரக பணியாளர் பின்னர், அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் பொய் சாட்சியங்களை முன்வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்திருக்கின்றது.

சுவிட்ஸர்லாந்து தூதரக பணியாளர் தொடர்பான வழக்கு இன்றைய தினம் கொழும்பு தலைமை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிணையில் விடுதலையாகியிருக்கும் தூதரக பணியாளர் கானியர் பெனிஸ்டர் பிரான்ஸிஸ் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசியை அரச இரசாயண பகுப்பாய்வாளரிடம் ஒப்படைத்து அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வதற்கு உத்தரவிடுமாறு அரச தரப்பு சட்டத்தரணி நீதவானிடம் கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து கானியர் பெனிஸ்டர் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, கானியர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசியை நீதிமன்றில் ஒப்படைத்தார்.

எனினும் கானியர் பெனிஸ்டர் சுவிட்ஸர்லாந்து தூதரக பணியாளர் மாத்திரமன்றி தூதரகத்துடன் நடத்திய தொலைபேசி உரையாடல்கள், தொடர்புகள் குறித்த கையடக்கத் தொலைபேசியில் இருப்பதால், இராஜதந்திர முக்தியை உறுதிப்படுத்தும் வியன்னா உடன்படிக்கைக்கு அமைய அவரது கையடக்கத் தொலைபேசியின் உள்ளடக்கங்களை சோதனைக்கு உட்படுத்த முடியாது என்று கானியாவின் சட்டத்தரணி நீதிமன்றில் தெளிவுபடுத்தினார்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் 21ஆம் திகதி முடிவொன்றை அறிவிப்பதாக கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன அறிவித்துள்ளார்.

அத்துடன் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் சுவிட்ஸர்லாந்து தூதரக பணியாளர் கானியர்பெனிஸ்டர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதவான், எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

Thanks – Teakadaibench.lk

You May also like