விசேட அறிவிப்புக்கு தயாராகும் ஹிருணிகா!

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவினால் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் குரல் பதிவுகளை வெளியிட்டவர்களை இன்று நாடாளுமன்றத்தில் வைத்து அம்பலப்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தீர்மானித்துள்ளார்.

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கைக்கூலிகளை விடுதலை செய்து இராணுவ ஆட்சியை கொண்டுவருவதற்கே அரச உயர்பீடத்தினர் முயற்சித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர குற்றஞ்சாட்டினார்.

தன்னுடைய அனுமதியின்றி குரல் பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியமை குறித்து சில தனியார் ஊடகங்களுக்கு எதிராக சிவில் வழக்கு தொடரவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல சிங்கள நடிகருமான ரஞ்ஜன் ராமநாயக்கவிடம் இருந்து அவரால் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் தொலைபேசி கலந்துரையாடல்கள் அடங்கிய இறுவெட்டுக்கள் பொலிஸாரினால் அண்மையில் கைப்பற்றப்பட்டன.

இந்த இறுவெட்டுக்களில் அடங்கியிருக்கும் குரல் பதிவுகள் தற்போது ஒவ்வொன்றாக சமூக வலைத்தளங்களிலும், பிரதான சில சிங்கள ஊடகங்களிலும் வெளிவர ஆரம்பித்துள்ளன.

குறிப்பாக சர்ச்சைக்குரிய வழக்குகளை விசாரணை செய்த நீதிபதிகளும் ரஞ்ஜன் ராமநாயக்கவுடன் நடத்தியதாகக் கூறப்படும் குரல் பதிவுகளும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.

இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஹிருணிகா பிரேமச்சந்திரவும் சக நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்ஜன் ராமநாயக்கவுடன் உரையாடியதாகக் கூறப்படும் குரல் பதிவுகளும் அம்பலமாகி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது.

இந்நிலையில், இதுகுறித்து உண்மையை அறிய முறைப்பாடு வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நேற்று மாலை கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.

முறைப்பாட்டை பதிவுசெய்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர், எத்தனை குரல் பதிவுகளை வெளியிட்டாலும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான தனது குரலை கட்டுப்படுத்த முடியாது என்றும், குரல் பதிவுகளை திரிபுபடுத்தி வெளியிட்டவர்கள் யார் என்பதை இன்று நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தப் போவதாகவும் கூறினார்.

You May also like