கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகப் பணியாளர் கார்னியாவுடன் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி ஷாணி அபேசேகர உட்பட பல ஊடகவியலாளர்களும் தொலைபேசியில் பலதடவை தொடர்புகொண்டு உரையாடிய விவகாரம் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 19ஆம் திகதியிலிருந்து நவம்பர் 30ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருப்பதாக இரகசிய பொலிஸார் கொழும்பு மேலதிக மஜிஸ்திரேட் நீதவான் லங்கா ஜயரத்னவுக்கு முன்பாக நேற்று தெரியப்படுத்தியுள்ளனர்.
வெள்ளை வானில் கடத்தப்பட்டு விசாரணையின் பின் துன்புறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக சுவிஸ் தூதரகத்தில் பணிபுரிந்த தமிழ்ப் பெண்ணான காரினியா தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.
இதில் சம்பந்தப்பட்ட பெண்ணும் ஆஜராகியிருந்தார்.
இதன்போது பிரசன்னமாகிய குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் மன்றில் ஆஜரான சட்டமா அதிபர் திணைக்களம் சார்பிலான அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக்க பண்டார, நவம்பர் 19 தொடக்கம் 30ஆம் திகதிவரை லேக் ஹவுஸ் பத்திரிகையின் ஊடகவியலாளர் தரிஷா பெஸ்டியன், அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கிரிஷாந்த குரே, ஷாணி அபேசேகர, பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா உள்ளிட்டவர்கள் அடிக்கடி தொடர்புகொண்டு உரையாடியிருப்பதாக மன்றில் தெரிவித்தார்.
இந்நிலையில் விசாரணையின் தர அறிக்கையை எதிர்வரும் மாதம் 11ஆம் திகதி மன்றில் சமர்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் வரை வழக்கை ஒத்திவைத்தார்.