சீன கப்பல்கள் மூலம் இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்?

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள சீன கப்பல்கள் மூலம் இலங்கையில் கொரோனா வைரஸ் இலகுவாக உள்வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

அகில இலங்கை ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர்கள் சங்கம் புத்தளம் மாவட்ட மீன்பிடி உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று மாரவிலவில் செய்தியாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போதே அவர்கள் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் இது தொடர்பில் வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.

இதற்கிணங்க வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு மீன் பிடிப்பதற்காக வரும் கப்பல்களை இலங்கை கடலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் அந்த கப்பல்களை இலங்கை மீனவர் துறைமுகங்களுக்குள் நிறுத்துவதற்கு அனுமதிக்க கூடாதென்றும் அவர்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போது விமான நிலையங்களில் அதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோதும் மீன்பிடித் துறைமுகங்களில் அவ்வாறான சுகாதார பாதுகாப்பு செயற்றிட்டங்கள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான ‘ ரமோன் அல்கராஸ் ‘ மற்றும் ‘ டவாவோ டெல்சூர்’ என்ற இரு கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பல்களை இலங்கை கடற்படை சம்பிரதாயப்படி வரவேற்றது.

அந்த கப்பல்களில் வருகை தந்த கடற்படை தளபதி கேர்ணல் நொயல் டி பெலரன் , கடற்படை அதிகாரிகளான பிரான்ஸிஸ்கோ லூவிஸ் மற்றும் ஹோமர் டி கொன்சாலெஸ் ஆகியோர் மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்துக்கு விஜயம் செய்தனர். இதன் போது மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தின் கடற்படை தளபதி ரியர் அத்மிரல் சுமத் வீரசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன் போது இரு தரப்பு முக்கியத்துவமுடைய பல விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதோடு, நினைவு சின்னங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.

இந்த கப்பல்கள் நாடு திரும்புவதற்கு முன்னர் அவற்றில் வருகை தந்திருப்பவர்கள் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளனர். நாளை மறுதினம் புதன்கிழமை இந்த கப்பல்கள் மீண்டும் பிலிப்பைன்ஸ் திரும்பவுள்ளன.

You May also like