சம்பந்தனின் பதில் வித்தியாதரனுக்கு பேரிடி:விக்னேஸ்வரன் கடும் முயற்சி!

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக யாழ். மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பிரபல பத்திரிகையாளரான வித்தியாதரன் முன்வைத்த கோரிக்கையை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை யாழ்ப்பாணத்தில் வைத்து பத்திரிகையாளர் என்.வித்தியாதரன் சந்தித்திருக்கின்றார்.

இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண சபை முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே கூட்டமைப்பின் பேச்சாளரான சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரனுக்கும், கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான உதயன் பத்திரிகையின் நிறுவுனர் ஈ.சரவணபவனுக்கும் இடையே கடும் போட்டிநிலை காணப்படுகின்றது.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் சரவணபவன் எம்.பிக்கு இடம் ஒதுக்க வேண்டாம் என்று சுமந்திரன் எம்.பி பகிரங்கமாகவே தெரிவித்திருந்த நிலையில் கடுமையான மோதல் இவ்விருவருக்கும் இடையில் காணப்படுவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சரவணபவன் எம்.பியின் மைத்துநராகிய காலைக்கதிர் பத்திரிகையின் உரிமையாளர் என்.வித்தியாதரனுக்கு கூட்டமைப்பில் போட்டியிட இடம் வழங்கமுடியாது என்கிற கடும் தீர்மானத்தை அவரது முகத்துக்கு முன்பாகவே இரா.சம்பந்தன் தெரிவித்துவிட்டதாக கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த முயற்சி செய்துவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் பத்திரிகையாளர் வித்தியாதரனை சந்திக்கவுள்ளதாகவும் எமது செய்தி இணையத்தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

You May also like