முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன்: சஜித் அதிரடி அறிவிப்பு!

முன்வைத்த காலை பின்வைப்பதில்லை என்று எதிர்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவர் சஜித் தலைமையில் இன்று திங்கட்கிழமை பொது எதிரணி உருவாக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதற்கான நிகழ்வானது கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் இன்று முற்பகலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவருக்கு ஆதரவளிக்கின்ற அணியினர் கலந்துகொள்ளவில்லை.

எவ்வாறாயினும் தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக்க ஹெல உறுமய உட்பட்ட கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் அரசியல் கூட்டணியின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

10 அரசியல் கட்சிகள், 20 தொழிற்சங்கங்கள், 18 சிவில் அமைப்புகள் இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் கூட்டணி தொடர்பான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என ரணில் விக்ரமசிங்க நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May also like