‘பாதிக்கப்பட்ட தமிழர்களை மறந்த மனித உரிமைகள் ஆணையாளர்’

இலங்கை அரசாங்கத்திற்கு சார்பான, மனித உரிமைகள் தொடர்பிலான அறிக்கைக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

சித்திரவதைகளை எதிர்நோக்கி நாட்டைவிட்டு வெளியேறியவர்களும், வடக்கில் காணாமலhக்கப்பட்டவர்களின் உறவினர்களும் இணைந்து, மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெசேலுக்கு எதிர்ப்பு வெளியிட்டு இரண்டு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர்.

மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள, இலங்கையின் மனித உரிமைகள் நடத்தைக் குறித்த அறிக்கையில், நாட்டில் இடம்பெற்ற சித்திரவதைகளைப் பற்றி குறிப்பிடாமைக்கு குறித்த கடிதத்தில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் ஒருவர் இந்த மாதம் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது அமர்வில் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்து சிறப்பு அறிக்கையை சமர்ப்பித்த, மனித உரிமைகள் ஆணையாளரும், தனது தாயகமான சிலியில் சித்திரவதைக்கு உள்ளானவரே.

அதன் பின்னர் அவர் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியாக புதிய சாதனை படைத்தார். இலங்கையில் சித்திரவதை செய்யப்பட்ட இரண்டு சம்பவங்களை மட்டுமே அவர் குறிப்பிடுகிறார், எனினும் கடந்த வருடம் பாதுகாப்பு படையினரால் சித்திரவதை செய்யப்பட்டவர்கள் தொடர்பில் எவ்வித தகவலையும் அவர் குறிப்பிடவில்லை.

“இந்த வாரம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அளித்த அறிக்கை எங்களுக்கு மிகுந்த மன வேதனையை தந்துள்ளது; எங்களது வரலாற்றை நீங்கள் அழித்துள்ளீர்கள்.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சித்திரவதைகள் கடந்த வருடமும் இடம்பெற்றது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு நாம் வாழும் சாட்சிகள். ஆனால் இந்த ஆண்டு நீங்கள் அதைக் குறிப்பிடவில்லை. ‘

“நீங்கள் எங்களை நம்பவில்லை என்றால்இ அது மிகவும் வேதனையாக இருக்கும், தயவுசெய்து வந்து எங்கள் கண்ணீர் மற்றும் வடுக்களைப் பாருங்கள்.” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்னர் மனித உரிமைகள் பேரவைக்கு, ஆணையாளர் சமர்ப்பித்த அறிக்கையில், மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வலியுறுத்தினார்.

“கிடைக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எதிரான பாலியல் வன்முறை உள்ளிட்ட சட்டவிரோத கடத்தல்கள் மற்றும் சிறை வைக்கப்பட்டமை பற்றிய சான்றுகள் நம்பத்தகுந்தவை எனவும், இதுபோன்ற நடவடிக்கைகள் இலங்கையின் வடக்கில் தொடரக்கூடும் என்றும் நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதைக் குறிக்கிறது.” என கடந்த மார்ச் மாத அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், மனித உரிமை மீறல்களால் மற்றும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் குறித்து தற்போதைய அறிக்கையில் குறிப்பிடப்படாமை கவலையளிப்பதாக வடக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

“கடுமையான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான தகவல்கள் அறிக்கையிலிருந்து நீக்கப்படுவது மிகவும் முக்கியமானது” என காணாமல் போனவர்களின் 85 உறவினர்கள் கையெழுத்திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள, காணாமல்போனோர் தொடர்பிலான அலுவலகம், பாதிக்கப்பட்ட மக்களால் பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

“காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகம் முக்கியமான பல முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். பாதிக்கப்பட்ட சமூகமாக அது என்ன என்பதை அறிய விரும்புகிறோம். 2009 மே 18ஆம் திகதி, லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அல்லது ஜெனரல் ஜகத் ஜயசூரியாவிடம் சரணடைந்த எங்கள் உறவினர்களுக்கு என்ன ஆனது என்று அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளீர்களா?” என அந்த கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

 

 

You May also like