இந்தியாவில் இருந்து இன்றும் பலர் இலங்கைக்கு!

நாட்டுக்கு வருகை தர முடியாத நிலையில், இந்தியாவின் தமிழ்நாட்டில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 53 இலங்கைப் பிரஜைகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய, ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் ஊடாக, அவர்கள் இன்று அதிகாலை 4.30 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

வருகை தந்தவர்களில்  51 முதியவர்கள் மற்றும் 02 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.

இதன்படி, அவர்கள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்,  பரிசோதனைப் பெறுபேறுகள் கிடைக்கும் வரை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள விடுதியொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, சர்வதேச கப்பல் நிறுவனத்தில் சேவை புரியும் 30 இந்திய பிரஜைகள் விசேட விமானமொன்றின்மூலம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

குறித்த அனைவரும் இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்கவிமான நிலையம் நோக்கி நேற்று இரவு 8.35க்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஸ்பைஸ் ஜெட் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் ஊடாக அழைத்துவரப்பட்ட அவர்கள் அனைவரும் இந்திய பிரஜைகள் என எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த இந்திய பிரஜைகள் அனைவரும் தனியார் வைத்தியசாலை வைத்தியர்களின் மூலம் PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

You May also like