தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா; பேச்சு இன்று!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்குவது தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையில் கடந்த வாரம் இந்த விடயம் தொடர்பிலான பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றிருந்தது.

இதன் போது அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் ஆயிரம் ருபா நாட் சம்பளத்தை வழங்க தோட்ட நிறுவனங்கள் முன்வர வேண்டும் என பிரதமர் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் தற்போதுள்ள பொருளாதார நிலைமையில் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதில் பல்வேறு சிரமங்கள் பெருந்தோட்ட நிறுவனங்கள் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தன.

இந்த நிலையில் இந்த விடயங்கள் தொடர்பிலான அடுத்த கட்ட கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இன்றைய பேச்சுவார்த்தையின்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அமைச்சர் ரமேஷ் பத்திரண, பெருந்தோட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

You May also like