இன்றும் பலர் நாடு திரும்பினர்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிலிப்பைன்ஸில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 41 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய, அவர்கள் ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் மூலம், பிலிப்பைன்ஸின் மணிலா நகரிலிருந்து, நேற்றிரவு 11.45 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இன்படி, அவர்கள் அனைவரும் விமான நிலையத்திலேயே, பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் தற்போது கொரோனா தொற்று சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும்,  வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் மூலம் நாட்டுக்குள் கொரோனா பரவும் ஆபத்து குறையவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதனால், தொடர்ந்தும் சுகாதார பாதுகாப்பு முறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க, பிரதிச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற ஊழியர்கள் குழுவின் பிரதானி நீல் நித்தவெல்ல உட்பட நாடாளுமன்ற திணைக்கள அதிகாரிகளை நேற்றைய தினம் சுகாதார அமைச்சில் சந்தித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், பொதுத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் நாடாளுமன்றம் கூடும் நேரங்களில் சுகாதார பாதுகாப்பு முறைகளை கையாண்டு கூட்டங்களை நடத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடி, சுகாதார அமைச்சின் அதிகாரிகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க மேலும் கூறியுள்ளார்.

You May also like