இரணைமடு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில்!

இரணைமடு பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மண்ணகழ்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இரணைமடு விவசாய சம்மேளனம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு தெரிவித்த இரணைமடு விவசாய சம்மேளனத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

கரைச்சி பிரதேச சபை முன்பாக இருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த கவனயீர்ப்பு பேரணி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தையடைந்து அங்கு அரசாங்க அதிபரிற்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இரணைமடு குளத்தின் கீழ் உள்ள கனகராயன் ஆற்றுப்படுக்கையில் மிக மோசமான முறையில் மண்ணகழ்வு இடம்பெற்று வருவதைக் கட்டுப்படுத்துமாறு கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் செருக்கன் பகுதியில் அமைக்கப்படும் உப்பளத்தின் பணிகளை நிறுத்தி செய்கை நிலங்களை பாதுகாத்து தருமாறும் குறித்த போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் இரணைமடு விவசாய சம்மேளனத்தின் கீழ் உள்ள கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

You May also like