மற்றுமொரு கொரோனா கொத்தனி;இன்று 110 பேருக்கு தொற்று

நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள மாஸ் ஆடைத்தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மிகப்பெரிய கொரோனா கொத்தனியொன்று அங்கு ஏற்படும் அபாயமும்.உள்ளது.

இதேவேளை,மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 899 ஆக உயர்வடைந்துள்ளது

இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் மேலும் 110 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதற்கமைய, அவர்களில் 38 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்தவர்கள் எனவும், ஏனைய 72 பேரும் அவர்களுடன் தொடர்பினை வைத்திருந்தவர்கள்  எனவும் சுட்டிகக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐயாயிரத்து 354 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 5 பேர் குணமடைந்துள்ளனர்.

தொற்று நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 385 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில், ஆயிரத்து தொள்ளாயிரத்து 56 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றது.

இதேவேளை, நாட்டில் PCR பரிசோதனைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர், விசேட வைத்திய நிபுணர் ஜயருவன் பண்டார தெரிவிக்கின்றார்.

கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டுப் பிரிவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன், கொழும்பு மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் PCR பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இதனிடையே, கொழும்பு மாநகர சபையின் நிதிக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் நிதிக்குழு கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, இந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை ஊடகசந்திப்பில் பங்கேற்ற ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக  அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடந்த 13 ஆம் திகதி இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் குறித்த ஊடகவியலாளரின் மருததுவ அறிக்கை கிடைக்கும் வரையில், அந்த ஊடகசந்திப்பில் பங்கேற்ற ஏனைய ஊடகவியளாலர்களை சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.

மேலும், குறித்த ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட அனைத்து ஊடகவியலாளர்களையும் எதிர்வரும் நாட்களில் சமூக தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டாமெனவும் அரசாங்க தகவல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

You May also like