மலையகத்தில் அதிகரிக்கும் குளவி தாக்குதல்; தீர்வு எப்போது?

மலையகத்தைப் பொறுத்தவரை பிரதான தொழிலாக பெருந்தோட்டத்துறையே அடையாளம் காணப்படுகிறது.

தற்போது பெருந்தோட்டங்களில் தொழில்புரிவோரின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்திருந்தபோதிலும், தேயிலை மலைகள் தான் இன்றும் மலையகத்தின் அடையாளமாக உள்ளன.

இந்த நிலையில், மலையகத்தின் பெருந்தோட்டங்களில் வசிக்கும் மற்றும் தொழில்புரியும் மக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்குவது இந்த குளவிக்கொட்டு விடயமே.

தற்போது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் குளவிக் கொட்டினால் பாதிக்கப்படுவது வழமையான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது.

கடந்த இரண்டு மாத காலத்தில் மாத்திரம் குளவிக் கொட்டினால் 65க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.

அத்துடன், பெண் தொழிலாளி ஒருவரின் காதுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குளவிகள் மீட்கப்பட்ட சம்பவமும் அண்மையில் பதிவாகியிருந்தது.

மேலும், மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையும் குளவிக் கூடுகள் காரணமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 65 பேர் என்னும் எண்ணிக்கை சிறியதாக இருந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்பு பாரியது.

ஒருவரின் காதில் இருந்து குளவிகள் மீட்கப்பட்டதில் இருந்தே இதன் அபாயத்தைக் கணிப்பிடக்கூடியதாக உள்ளது.

எனினும், இந்த குளவிக் கூடுகளை முறையாக அகற்ற தோட்ட நிர்வாகமோ அல்லது உரிய தரப்பினரோ முன்வராத நிலைமையே காணப்படுவதாக, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், குளவிக் கொட்டுக்கு இலக்காகும் தோட்டத் தொழிலாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கான வசதிகளில் பற்றாக்குறை நிலவுகின்றமையையும் அவதானிக்க முடிகின்றது.

இதன் காரணமாக, தோட்டத் தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் அச்சத்துடனேயே தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், குளவிக் கொட்டுக்கு இலக்காவதன் காரணமாக தொழிலாளர்கள் வருமான இழப்பையும் சந்திக்க நேரிடுகிறது.

எனினும், எத்தனை அச்சுறுத்தல்கள் அல்லது இடையூறுகள் காணப்பட்டாலும் தொழிலுக்கு சென்றே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் தோட்டத் தொழிலாளர்களுக்குக் காணப்படுகிறது.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் தமது சேவையை மட்டுப்படுத்தியுள்ள நிலையிலும், தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் தமது கடமைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மழையோ, வெய்யிலோ அல்லது வேறு எந்த காரணியோ இடையூறாகக் காணப்பட்டாலும், அத்தனைக்கும் மத்தியில் தமது கடமையைத் தவறாதவர்களாகவே தோட்டத் தொழிலாளர்கள் காணப்படுகின்றனர்.

அதுமட்டுமல்ல, இலங்கையின் பொருளாதாரத்தில் கடந்த காலத்தில் பாரிய பங்கு வகித்திருக்கிறது இந்த பெருந்தோட்டத் துறையான தேயிலைத் தொழில்.

அத்துடன், இன்றும் இலங்கைப் பொருளாதாரத்தில் தேயிலைக்கு தவிர்க்க முடியாததொரு பங்கு உள்ளது நிதர்சனமான உண்மை.

ஆகவே, இந்த குளவிக் கொட்டு பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படுவது இன்றைய நிலையில் மிகவும் அத்தியாவசியமானதாகக் கருதப்படுகிறது.

இதன் அடிப்படையில், உரிய தரப்பினர் கவனம் செலுத்தி, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் இந்தக் குளவிக் கொட்டுப் பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என்பதே, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கையாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May also like