பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றக் கூட்டம் இன்று

பாராளுமன்றம் இன்று (20) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

சபாநாயகர் அறிவிப்புவேளையின்போது, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தில் சட்டவியாக்கியானத்தை சபாநாயகர், சபைக்கு அறிவிப்பார்.

அதன்பின்னர் சபையின் நாளாந்த நடவடிக்கைகள் ஆரம்பாகும். ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான 3 ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

நாளை 21 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு 20ஆவது திருத்தச்சட்டமூலம்மீதான விவாதம் ஆரம்பாகும். 21,22 ஆம் திகதிகளில் முற்பகல் 10 மணி முதல் இரவு 7.30 மணிவரை விவாதத்தை முன்னெடுக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

22 ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு விவாதம் முடிவடைந்ததும் குழு நிலை ஆரம்பிக்கப்படும். அதன்பின்னர் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு 20ஆவது திருத்தச்சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்படும், சிலவேளை ’20’ நிறைவேறுவதற்கு இரவு 10 மணிகூட தாண்டலாம்.

அதேவேளை, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிகோலும் சரத்துகள் இருந்தால் அவற்றை நீக்கிவிட்டு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளில் ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழ் அரசுக்கட்சி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, முஸ்லிம் தேசியக் கூட்டணி ஆகியன ’20’ ஐ எதிர்ப்பதற்கு தீர்மானித்து எதிராக வாக்களிக்கவுள்ளன.

அத்துடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி , தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, தேசிய காங்கிரஸ் மற்றும் ஈ.பி.டி.பி. ஆகியன ஆதரவாக வாக்களிக்கவுள்ளன.

ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் எமது மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் இன்னும் எம்.பிக்களை நியமிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

You May also like