வரலாற்றில் முதற்தடவை வைரஸினால் மூடப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்

நாடாளுமன்றம் இன்றும் (26) நாளையும் மூடப்பட்டிருக்கும் என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இந்த இரு தினங்களிலும் நாடாளுமன்ற ஊழியர்கள் எவரும் கடமைக்குச் சமூகமளிக்கத் தேவையில்லை என்று ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற சுற்றாடலில் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் பணியாற்றும் ஸ்ரீஜயவர்தனபுர அதிரடிப்படை முகாமில் ஒருவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளதனையடுத்தே நாடாளுமன்றத்தை இரு தினங்கள் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த காலங்களில் வெள்ள அனர்த்தம் போன்ற வேளைகளில் மாத்திரமே நாடாளுமன்றம் தற்காலிகமாக மூடப்பட்ட சந்தர்ப்பங்கள் பதிவாகின.
ஆனால் ஒரு வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை நாடாளுமன்றம் மூடப்படும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமைகிறது என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

You May also like